விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு


விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 11 Sep 2018 9:46 PM GMT (Updated: 12 Sep 2018 12:12 AM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. ஒருகிலோ மல்லிகை பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடலூர், 


கடலூர் பஸ்நிலையம் அருகில் பூமார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, ஜாதிமல்லிகை, அரும்பு போன்ற பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இன்று(புதன்கிழமை) சுபமுகூர்த்த நாள் மற்றும் நாளை(வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்து காணப்பட்டது.
அதாவது நேற்று முன்தினம் கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜாதிமல்லி, அரும்பு ஆகிய பூக்களும் இதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிலோ அளவில் ஸ்டார் ரோஸ் ரூ.160, ரோஸ்(சாதாரண ரகம்)- ரூ.50, கேந்தி ரூ.30, கோழிகொண்டை ரூ.30, சாமந்தி ரூ.240 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.
பூமார்க்கெட்டு வந்த பொதுமக்கள் பூக்களின் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிலோ அளவில் வாங்கி சென்றவர்கள் கிராம் அளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது. கிராம் அளவில் வாங்கி வந்தவர்கள் சிலர் பூக்களின் விலையே கேட்டுவிட்டு அப்படியே திரும்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், மல்லிகை பூவை பொறுத்தவரை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜாதிமல்லி சீசன் இப்போதுதான் தொடங்குகிறது. எதிர்பார்த்த அளவில் இந்த 2 ரக பூக்களின் வருகையும் இல்லை. சுபமுகூர்த்த தினம், விநாயகர் சதுர்த்தி விழா என்று அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்தோ குறைவாக உள்ளது. இதுதான் பூக்களின் விலை உயர்வுக்கு காரணம் என்றார். 

Next Story