சேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு


சேவூர் அருகே வீடு புகுந்து கொள்ளை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை - அவினாசி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 10:07 PM GMT)

சேவூர் அருகே வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவினாசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

அவினாசி, 


திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த அசநல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவருடைய மனைவி பூவாத்தாள் (வயது 65). இவர் கடந்த 5.9.2015 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், பூவாத்தாளை மிரட்டி அவர் அணிந்து இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ஒரு செல்போன், ரூ.500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து(47), ஜலகண்டபுரம் காப்பரத்தான் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (50), கோவை பெரியநாயக்கன்பாளையம் திரு.வி.க. நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அவினாசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்குவிசாரணையின் போது மணிகண்டன் இறந்துவிட்டார். மாரிமுத்து மற்றும் சரவணன் மீதான வழக்குகள் தனித்தனியாக நடந்து வந்தன. இதில் குற்றம்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சரவணன் மீதான வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட சரவணனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா தீர்ப்பு கூறினார். இதையடுத்து சரவணனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story