வேடசந்தூர் அருகே விபத்து: லாரிகள் மோதல்; 4 டிரைவர்கள் காயம்
வேடசந்தூர் அருகே கன்டெய்னர் லாரி மோதியதில் தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
வேடசந்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டையில் இருந்து நெல்லை மாவட்டம் கடையநல்லூருக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை கடையநல்லூரை சேர்ந்த சண்முகவேல் (வயது 37) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவர்களாக கடற்கரை (35), பூபதி (42) ஆகியோர் உடன் வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கரூர்-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யர்மடம் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது சண்முகவேலுக்கு தூக்கம் வரவே, லாரியை நிறுத்தி மற்றொரு டிரைவரான கடற்கரையை ஓட்ட கூறியுள்ளார். அந்த வேளையில் பின்னால் கரூரில் இருந்து நெல்லைக்கு காட்டன் துணிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தக்காளி ஏற்றி வந்த லாரி உருண்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் ஏற்றி வந்த தக்காளி பெட்டிகளும் சிதறின. மேலும் லாரியில் வந்த டிரைவர்கள் சண்முகவேல், கடற்கரை, பூபதி மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் நெல்லை மாவட்டம், ஜக்கம்மாபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி (40) ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story