குடிபோதையில் கூச்சலிட்டதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் தொழில் அதிபர்கள் உள்பட 4 பேர் கைது


குடிபோதையில் கூச்சலிட்டதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் தொழில் அதிபர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 10:15 PM GMT (Updated: 12 Oct 2018 7:27 PM GMT)

பெங்களூருவில், குடிபோதையில் சாலையில் நின்று கூச்சலிட்டதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது பீர் பாட்டிலால் தாக்கிய தொழில் அதிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் சுந்தர்ராஜ் மற்றும் பசவராஜ். இவர்கள் 2 பேரும் குந்தலஹள்ளி கேட் பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சாலையோரம் காரில் அமர்ந்து சிலர் மதுஅருந்துவதாகவும், குடிபோதையில் அப்பகுதி வழியாக செல்பவர்களுடன் தகராறு செய்வதாகவும், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது பீர் பாட்டிலை வீசியதாகவும் போலீஸ்காரர்கள் சுந்தர்ராஜ், பசவராஜிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் 2 பேரும் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது காரில் அமர்ந்து 4 பேர் மதுஅருந்தியதுடன், குடிபோதையில் கூச்சலிட்டபடி இருந்தனர். அப்போது அங்கு சென்ற 2 போலீஸ்காரர்களும் அவர்களை கண்டித்துள்ளனர். உடனே குடிபோதையில் இருந்த 4 பேரும், போலீஸ்காரர்கள் சுந்தர்ராஜ், பசவராஜை தாக்கினார்கள். மேலும் பீர் பாட்டிலால் போலீஸ்காரர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில், 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் எச்.ஏ.எல். போலீஸ் இன்ஸ்பெக்டர் மெகபூ பாட்ஷா, சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் ஆகியோர் ஜீப்பில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீஸ் ஜீப் வருவதை பார்த்ததும் 4 நபர்களும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றனர். உடனே காரை விரட்டி சென்ற போலீசார், மாரத்தஹள்ளி மேம்பாலத்தில் வைத்து அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் காரில் இருந்த 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் மாரத்தஹள்ளி அருகே முனேகொலலா பகுதியை சேர்ந்த தொழில்அதிபர்களான கவுதம் ரெட்டி(வயது 24), குருபிரசாத்(28), தனியார் வங்கி ஊழியரான பிரசாந்த்(28), ஆட்டோ டிரைவரான சூர்யபிரகாஷ்(41) என்று தெரிந்தது.

படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் சுந்தர்ராஜ், பசவராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். கைதான 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story