தாராசுரம் கோவில் வளாகத்தில் காதலர்களுக்கு வாள் வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


தாராசுரம் கோவில் வளாகத்தில் காதலர்களுக்கு வாள் வெட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 7:30 PM GMT)

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை மர்ம நபர் வாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சடலிங்கம் மகன் குருமூர்த்தி(வயது 21). கூலித்தொழிலாளி. இவரும் பட்டீஸ்வரம் கோபிநாதபெருமாள் கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ராஜலெட்சுமியும்(19) கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் குருமூர்த்தி, தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் அமுதபிரியன்(21) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனது காதலி ராஜலெட்சுமியை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கையில் வாள் போன்ற ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர், காதலர்களான குருமூர்த்தியையும், ராஜலெட்சுமியையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் குருமூர்த்தி, ராஜலெட்சுமி ஆகிய இருவருக்கும் வயிறு, கை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. குருமூர்த்தியின் நண்பனான அமுதபிரியன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள், கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த குருமூர்த்தி, ராஜலெட்சுமி ஆகிய இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ராஜலெட்சுமி மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குருமூர்த்திக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தாராசுரம் கோவில் வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்த காதலர்கள் மீது வாளால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story