சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்; ம.தி.மு.க. வலியுறுத்தல்
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என பரமக்குடியில் ம.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
பரமக்குடி,
பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்டம் திமு.க. செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் சாதிக் அலி தலைமையில் நடைபெற்றது.
மாநில விவசாய அணி துணை செயலாளர் முருகேசபாண்டியன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் பசீர் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், முன்னாள் அவைத்தலைவர் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர பொறுப்பாளர் சரவணன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொறுப்பாளர் குணா தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது, மாவட்ட கழகத்தின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.50 லட்சம் வழங்குவது, பரவி வரும் மர்மக்காய்ச்சலை முழுவதுமாக தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசால் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிச்சைமணி நன்றி கூறினார்.