பாப்பிரெட்டிப்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் கொலை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் கொலை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 6:31 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொம்மிடி, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பெரிய மஞ்சவாடியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா (31), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களது பக்கத்து வீட்டில் உறவினர் பழனிசாமி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழனிசாமியின் மூத்த மகன் அஜீத்குமார் (22)இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அனிதாவிற்கும், அஜீத்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் அஜீத்குமாரை ஜெயராமன் கண்டித்து தாக்கியுள்ளார்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் அஜீத்குமார் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றார். நேற்று காலையில் பார்த்தபோது வீட்டில் அவர் இல்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அவரை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.

அப்போது அனிதா வீட்டில் அஜீத்குமார் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் அஜீத்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். அஜீத்குமார், அனிதா வீட்டுக்கு சென்றது எப்படி? அவரை கொலை செய்தவர்கள் யார், என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.

இதுதொடர்பாக ஜெயராமன் மற்றும் அவரது மனைவி அனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Next Story