மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நாமக்கல் அருகே பரபரப்பு
நாமக்கல் அருகே மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
சேந்தமங்கலம் தாலுகா, ரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் ஆண்டவர் நகர் உள்ளது. நேற்று ஆண்டவர் நகரில் கரட்டு பகுதியில் உள்ள மரங்களை தாலுகா அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த பாறைகளை அப்புறப்படுத்தியதோடு, அந்த இடத்தை நிரவும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், ரெட்டிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு தலைமையில் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்தனர். இதற்கு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்தில் இருந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் பொக்லைன் எந்திரத்துடன் ஊழியர்களும் வெளியேறினர்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு கூறுகையில், மரங்களை வளர்க்க அறிவுறுத்தும் அரசு, அவற்றை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரட்டு புறம்போக்கில் பட்டா வழங்குவதற்காக, உயர் அதிகாரிகள் இடத்தை சுத்தம் செய்ய சொன்னதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் பட்டா வழங்குவதற்கு அதிக அளவிலான நிபந்தனைகள் உள்ளது. எனவே வரும் காலங்களில் இதுபோல் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story