ஓமலூர் அருகே தடையை மீறி நடந்த மாட்டு சந்தை


ஓமலூர் அருகே தடையை மீறி நடந்த மாட்டு சந்தை
x
தினத்தந்தி 30 Nov 2018 10:00 PM GMT (Updated: 30 Nov 2018 5:37 PM GMT)

ஓமலூர் அருகே தடையை மீறி மாட்டு சந்தை நடந்தது.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி ஊராட்சி பெருமாள் கோவில் கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டு சந்தைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பசுக்கள், சிந்து மாடுகள், காளைகள், எருமைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வார்கள். இதில் பெரும்பாலான மாடுகளை கேரள வியாபாரிகள் வாங்கி தங்கள் மாநிலத்துக்கு கொண்டு செல்வார்கள். இதுமட்டுமின்றி விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வருவார்கள். இதனால் அன்றைய தினம் பல கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும்.

இந்தநிலையில் பிற மாவட்டங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இருந்ததால் இந்த நோய் சேலம் மாவட்டத்தில் பரவி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்டு சந்தைகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தடை விதித்து இருந்தார்.

இதனால் கடந்த 2 வாரங்களாக பெருமாள் கோவில் கிராமத்தில் வழக்கமாக நடக்கும் மாட்டு சந்தை நடைபெறவில்லை.

ஆனால் அந்த சந்தைக்கு வெளியே உள்ள தோட்டங்கள், காலி இடங்கள் ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து சந்தையில் விற்பதுபோல் விற்பனை செய்வதும், வாங்கிச்செல்வதுமாக கடந்த 2 வாரங்களாக இருந்தனர். இதேபோல் நேற்றும் சந்தைக்கு வெளியே உள்ள இடங்களில் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

ஆனால் மிக குறைந்த அளவு மாடுகளே கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தடை உத்தரவு இருந்தும் மாடு விற்பனை சந்தைபோல் நடைபெற்றது.

பெருமாள் கோவில் சந்தையில் மாடு விற்பனைக்கு தடை காரணமாக கடந்த 2 வாரங்களில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே தடை உத்தரவை நீக்கி மாட்டு சந்தையை வழக்கம்போல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story