பாபர் மசூதி இடிப்பு தினம்: ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


பாபர் மசூதி இடிப்பு தினம்: ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 5 Dec 2018 12:15 AM GMT (Updated: 5 Dec 2018 12:15 AM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ரெயில் நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

பாபர் மசூதி இடிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6–ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், ஜிந்தா கோதண்டராமன், அப்துல் ரகீம், ரங்கநாதன் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் முழுவதும் ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது இருந்தால் போலீசார் அவர்களிடம் விசாரித்து அனுப்பி வருகின்றனர்.

இதேபோல் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். மாநில எல்லைகளில் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புதிய பஸ்நிலையம், கடற்கரை சாலை மற்றும் கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலோர காவல்படை போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த பயணிகள் ரெயிலில் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்கள் லட்சுமணன், மரியதாஸ் ஆகியோர் ஈடுபட்டனர்.


Next Story