உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கள்ளிப்பாளையத்தில் 17-ந்தேதி காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு


உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கள்ளிப்பாளையத்தில் 17-ந்தேதி காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 9 Dec 2018 10:54 PM GMT (Updated: 9 Dec 2018 10:54 PM GMT)

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 17-ந்தேதி கள்ளிப்பாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தாராபுரம்,

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 17-ந்தேதி நடத்தப்படும் காத்திருப்பு போராட்டம் குறித்து, தாராபுரத்தில் விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் ஏற்பாடு செய்திருந்த, இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜாமணி, பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அமராவதி நதிநீர் பாதுகாப்பு சங்கத்தலைவர் லிங்கம்சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் குறித்து விவசாய சங்கத்தலைவர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிறுகிணறு கிராமத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில், மத்திய மின்தொடர் அமைப்பு (பவர்கிரிட்) சார்பாக, ஆசியாவில் 2-வது மிகப்பெரிய மின் பகிர்மான நிலையம் அமைக் கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விவசாயிகளின் விளை நிலங்களின் மீது உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது, விளை நிலங்களின் மதிப்பு குறைவதுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் எதுவும் செய்ய முடியாது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். விவசாயிக்கு எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும், அவர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய முடியாது. பவர்கிரிட் அமைப்பதை விவசாயிகள் எதிர்க்கவில்லை. யாருக்கும் எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். எனவே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை அரசு கைவிட்டு, பொது வழித்தடங்கள் வழியாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை புதைத்து, மின்பாதை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக முதல்-அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 17-ந்தேதி பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் தாராபுரம் தாலுகாவிலிருந்து 1 லட்சம் விவசாயிகள் கலந்து கொள்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story