பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளி மனைவிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளி மனைவிக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளி மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர், 

பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அய்யனார். தொழிலாளி. இவருக்கும் எதிர்வீட்டை சேர்ந்த ரமேஷ் மனைவி தாட்சாயினி (30) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தாட்சாயினியும், அய்யனாரும் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அய்யனாரின் மனைவி பழனியம்மாள்(47), தாட் சாயினியை கண்டித்தார். இதனால் அவமானம் அடைந்த தாட்சாயினி, அவரது வீட்டுக்கு சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 5-8-2008 அன்று நடந்தது.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் தாட்சாயினியை தற்கொலைக்கு தூண்டியதாக அய்யனார், பழனியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அய்யனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பழனியம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து பழனியம்மாளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜர் ஆனார்.

Next Story