புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து திருச்செந்தூரில் மது விற்றவர் கைது 2,490 பாட்டில்கள்–கார் பறிமுதல்


புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து திருச்செந்தூரில் மது விற்றவர் கைது 2,490 பாட்டில்கள்–கார் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:00 PM GMT (Updated: 12 Dec 2018 2:54 PM GMT)

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, திருச்செந்தூரில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர், 

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, திருச்செந்தூரில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2,490 மது பாட்டில்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை 

திருச்செந்தூர் பகுதியில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு மேற்பார்வையில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் சாக்குப்பைகளில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் பாத்திமா நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் நாராயணன் என்ற பாலாவை (40) போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் காரில் இருந்த 457 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2,490 மது பாட்டில்கள் பறிமுதல் 

கைதான பாலாவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது வீட்டின் வளாகத்தில் பள்ளம் தோண்டி, அதில் மதுபாட்டில்களை புதைத்து வைத்து இருந்ததை தெரிவித்தார். உடனே போலீசார் அவரது வீட்டில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 2,033 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 2,490 மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் ஆகும்.

பாலா, புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து, அவற்றை தனது வீட்டில் புதைத்து வைத்து உள்ளார். பின்னர் அவற்றை காரில் எடுத்து சென்று சிலருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். பாலாவை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

போலி நாணயம் தயாரித்தவர் 

இவர், கடந்த 1999–ம் ஆண்டு குரும்பூரில் உள்ள பட்டறையில் 5 ரூபாய் நாணயங்களை போலியாக தயாரித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பிலோமிநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செயல்பட்ட போலி மதுபான ஆலைக்கு மதுவிலக்கு பிரிவு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த 2,500 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, சிலரை கைது செய்த நிலையில், தற்போது பாலா கைது செய்யப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story