நரகுந்துவில் நெகிழ்ச்சி சம்பவம்: தந்தையை இழந்தவருக்கு ஆறுதல் கூறிய குரங்கு!


நரகுந்துவில் நெகிழ்ச்சி சம்பவம்: தந்தையை இழந்தவருக்கு ஆறுதல் கூறிய குரங்கு!
x
தினத்தந்தி 13 Dec 2018 3:38 AM IST (Updated: 13 Dec 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

நரகுந்துவில் தந்தையை இழந்தவருக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதக்,

பொதுவாக ஒரு வீட்டில் யாரோ ஒருவர் இறந்துவிட்டால், உற்றார், உறவினர்கள் வந்து துக்கம் விசாரித்துவிட்டு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.

ஆனால் இங்கே பாருங்கள்... மரணமடைந்தவரின் மூத்த மகனுக்கு தலை மீது கைவைத்து உறவினர் போல் வந்து ஒரு குரங்கு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் கதக் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கதக் மாவட்டம் நரகுந்து டவுனில் அர்பானா படாவனே பகுதியை சேர்ந்தவர் நாடனகவுடா பட்டீல் (வயது 71). இவர் நேற்று முன்தினம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அவரது உடலை குளிப்பாட்டி வீட்டில் அஞ்சலி செலுத்த குடும்பத்தினர் வைத்திருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மூத்த மகன் மரிகவுடாவிடம் துக்கம் விசாரித்தனர். மேலும் மரிகவுடாவுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர்.

இதை அந்த கிராமத்திற்குள் புகுந்த ஒரு குரங்கு பார்த்தப்படி இருந்துள்ளது. பின்னர் அந்த குரங்கு நாடனகவுடா பட்டீல் வீட்டுக்குள் சென்று, அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றது. இதை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் குரங்கை விரட்டினர். அப்படியும் அங்கிருந்து செல்ல குரங்கு மறுத்து விட்டது.

பின்னர் நாடனகவுடா பட்டீலின் உடலை பார்த்த குரங்கு சோகத்துடன் அங்கு அமர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த குரங்கு, சோகத்துடன் இருந்த மரிகவுடா மடி மீது தாவி ஏறியது. தனது பாஷையில் ஏதோ கூறியபடி குரங்கு மரிகவுடாவின் தலை மீது கை வைத்து ஆறுதல் கூறியது போல் அவ்வப்போது செய்தது.

நாடனகவுடா பட்டீலின் உடலை எடுத்துச்செல்லும் வரை அங்கேயே இருந்த குரங்கு, பின்னர் அது புறப்பட்டு சென்றது. இந்த காட்சி காண்போரை நெகிழவைப்பதாக இருந்தது.



Next Story