தனித்தனி சம்பவத்தில்: மாணவி உள்பட 3 பேர் தற்கொலை


தனித்தனி சம்பவத்தில்: மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Dec 2018 10:00 PM GMT (Updated: 12 Dec 2018 10:36 PM GMT)

தனித்தனி சம்பவத்தில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பண்ருட்டி, 

விருத்தாசலம் அருகே உள்ள காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி செல்லம். இவர்களுடைய மகள் மீனா (வயது 18). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீனா, தொழிற்பயிற்சி நிலையத்துக்கு படிக்க செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் அவரை செல்லம் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மீனா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்லம் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்த பாலமுருகன் மகள் கல்கி(வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் எழுதிய துணை தேர்தவிலும் அவர் தோல்வி அடைந்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த கல்கி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கல்கியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கல்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி அருகே உள்ள சின்னபுறங்கணியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் சுசித்ரா (24) முதுகலை பட்டதாரி. சம்பவத்தன்று இவர் தான் குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரை அவரது அக்காள் நித்யா எடுத்து குளித்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த சுசித்ரா திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயமடைந்த சுசித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுசித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story