காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் பிறந்தநாள் விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு


காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் பிறந்தநாள் விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 4:42 PM GMT)

காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பிறந்தநாள் விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 71-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் விழா நடந்தது.

விழாவில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு ஏற்புரையாற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

எழுச்சியோடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இங்கே வந்து கூடி இருப்பது என்னுடைய பிறந்தநாள் என்பது மட்டுமல்ல. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பொடி பையன் என்று எள்ளி நகையாடியவர்களுக்கு மரண அடி கொடுத்து, 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியை கொண்டாடவும் வந்திருக்கிறீர்கள். 3 மாநில தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் விழா என்பதால் ஈரோட்டுக்கு வந்து குவிந்து இருக்கிறீர்கள். எனக்கு வயது 71. ஆனால் இப்போது உங்களை எல்லாம் பார்க்கும்போது வயது 17 என்று உணர்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினர் இந்த விழாவில் காட்டும் ஆர்வத்தை விட இன்னும் அதிகமாக வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பணியில் ஈடுபடுவார்கள். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.

ஏன் என்றால் நாங்கள் வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடுவோம். கடந்த 2004-ம் ஆண்டு நானும், சகோதரியார் சுப்புலட்சுமி ஜெகதீசனும் உங்கள் மத்தியில் வாக்கு கேட்டபோது நெசவாளர்களுக்கான ‘சென்வாட்’ வரியை நீக்குவோம் என்று வாக்களித்தோம். அதை அப்போது மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தேர்தல் அறிக்கையில் வைத்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘சென்வாட்’ வரியை நீக்கினோம். இதை நெசவாளர்கள் நன்கு உணர்வார்கள்.

அதுபோல 5 மாநில தேர்தலின்போது அந்தந்த மாநில மக்களுக்கு ராகுல்காந்தி விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சி அமைத்த 10 நாட்களில் இதை செய்வோம் என்று அறிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்ற 2 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார். இதுபோல் 3 மாநிலங்களிலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சி.

பொதுமக்களுக்கு அவரவர் வங்கி கணக்குக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்று கூறிக்கொண்டு, தனக்கு ரூ.15 லட்சம் உடை அணிந்து அழகுபார்ப்பதா?.

பெண்கள் சிந்திக்க வேண்டும். ரூ.450 -ல் இருந்து ரூ.500-க்குள் இருந்த கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.1,200-க்கு உயர்த்திவிட்டு, வங்கியில் மானியம் செலுத்தப்படும் என்று அதையும் வழங்காமல் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு மோசடிகளை செய்து ஆட்சியை பிடித்தவர்கள், இன்னும் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதா?... இன்னும் 5 மாதத்தில் பா.ஜனதா கட்சி காணாமல் போகும். 5 மாநிலங்களில் பா.ஜனதா கட்சியின் படுதோல்வியை அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றிகரமான தோல்வி என்று கூறி இருக்கிறார்.

தற்போது நாட்டில் நல்ல சூழல் உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு எனது பிறந்தநாள் விழாவில் பேசும்போது, மத்தியில் ராகுல்காந்தி ஆட்சி அமைக்க வேண்டும். சென்னை கோட்டையில் மு.க.ஸ்டாலின் முடிசூட்ட வேண்டும் என்று கூறினேன். அதை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். எனது அடுத்த பிறந்தநாளின்போது ராகுல்காந்தி பிரதமராக இருப்பார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பார்த்து, இளைஞர்கள் சாரைசாரையாக வந்து காங்கிரசில் இணைகிறார்கள். தமிழ்நாட்டிலும் இது நடக்கிறது. கட்சியின் பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைவிட, தலைவர் ராகுல்காந்தி என்ற பெருமையிலேயே அவர்கள் வந்து சேருகிறார்கள்.

காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். ஆளும் பா.ஜனதா பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யார் போட்டியிட்டாலும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். பா.ஜனதாவினர் பல்வேறு யுக்திகளை செயல்படுத்துவார்கள். தேர்தலின்போது பணத்தை வாரி இறைப்பார்கள். வன்முறையை தூண்டுவார்கள். அதைஎல்லாம் முறியடிக்க வேண்டியது நமது கடமை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

Next Story