சாணார்பட்டி அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


சாணார்பட்டி அருகே கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 10:07 PM GMT)

சாணார்பட்டி அருகே பெருமாள், சிவன் கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

கோபால்பட்டி.


சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி பஸ்நிறுத்தம் அருகே பெருமாள், சிவன் மற்றும் விநாயகர் கோவில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் கிராம மக்கள் தினசரி வழிபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெருமாள் கோவிலின் அர்ச்சகர் முரளி வழக்கம்போல் பூஜையை முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார். அதேபோல் சிவன் மற்றும் விநாயகர் கோவிலுக்கான கதவுகளும் இரவு மூடப்பட்டன.

தற்போது மார்கழி மாத பஜனை தினந்தோறும் தொடங்கி நடைபெறுவதால் பெருமாள் கோவில் அர்ச்சகர் முரளி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலை திறந்தார். வழக்கம் போல் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆனால் அதில் கலந்து கொண்டவர்கள் யாரும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கவனிக்கவில்லை. காலை 7 மணி அளவில் பஜனை முடிந்து அர்ச்சகர் முரளி பூஜையில் ஈடுபட்டபோது கோவிலில் முன்புறம் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு வந்த நிர்வாகிகள் கோவிலை சுற்றிபார்த்தபோது பெருமாள் கோவில் உண்டியல் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள சிவன் கோவிலிலும் இரும்பு கதவை உடைத்து அங்கிருந்த ஒரு சிறிய உண்டியலிலும் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கோவில் வளாகம் மற்றும் உண்டியல்களில் இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக உண்டியல்களை திறந்து பணம் எண்ணாததால் 2 உண்டியல்களிலும் சேர்த்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story