வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் தலைமையில் நடந்தது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 5:44 PM GMT)

கிருஷ்ணகிரியில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான ஆய்வு கூட்டம் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வாக்களிக்கும் விதமான வாக்குச்சாவடி நுழைவுவாயில் இருந்து சக்கர நாற்காலி மூலம் வாக்களிக்கும் வசதி செய்ய வேண்டும்.

அடையாள அட்டைகளில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் ஒரே மாதியாக இருக்கும் பட்சத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் சரி பார்த்து கணினி மூலம் மாற்றம் செய்ய வேண்டும். இரண்டு முறை பதிவு மற்றும் ஒரே மாதிரியான பெயர்களை கண்காணித்து சரி செய்ய வேண்டும். ஒரே மாதிரியான எண்ணில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் பட்சத்தில் அதை கண்டறிந்து உண்மை தன்மை அறிந்து சேர்த்தல் அல்லது நீக்கல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருகிற 4-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறப்பு சம்பந்தமான இனங்களை உறவினர்களிடம் விசாரித்து இறப்பு சான்றிதல் அடிப்படையிலும், உறவினர்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே வாக்காளர் பட்டியிலிருந்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு நிலை அலுவலர்களுடன் சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சப்பாணிப்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொடர்பாக வீடு, வீடாக ஆய்வு செய்தார். அந்த நேரம் பொதுமக்களிடம் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா, குடும்ப உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் ஒரே இடத்தில் உள்ளதா? அல்லது வேறு இடத்தில் உள்ளதா? என்பதை கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகாசலம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story