ஏட்டு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது


ஏட்டு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 10:15 PM GMT (Updated: 8 Jan 2019 6:52 PM GMT)

ஏட்டு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருளானந்த நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தார். திடீரென அவர், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றினார்.

இதை பார்த்த அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மீட்டு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வரும் ஒருவருக்கும், ஆனந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்தனர். அப்போது ஆனந்தி தன்னிடம் இருந்த நகையை ஏட்டுவிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதால், தான் கொடுத்த நகையை திருப்பி தருமாறு ஆனந்தி அந்த போலீஸ் ஏட்டுவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அந்த ஏட்டு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கித்தர வேண்டும் என தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனந்தி, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

ஆனந்திக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதேபோல ஏட்டுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். பலத்த சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பாதுகாப்பையும் மீறி ஆனந்தி பெட்ரோல் பாட்டிலுடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story