குழந்தை கடத்தல் வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது


குழந்தை கடத்தல் வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 11:30 PM GMT (Updated: 9 Jan 2019 8:23 PM GMT)

குழந்தை கடத்தல் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது குழந்தை ஹரிணி (வயது 2). ஊசி, வளையல் விற்கும் வெங்கடேசன் 16–9–2018 அன்று கல்பாக்கத்தை அடுத்த பவுஞ்சூர் கிராமத்தில் மனைவி, குழந்தையுடன் படுத்து தூங்கினார். நள்ளிரவில் வெங்கடேசன் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

இது குறித்து அணைக்கட்டு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர். மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருப்போரூரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தை ஹரிணியை 3 மாதத்துக்கு பிறகு மீட்டனர்.

இந்த நிலையில் குழந்தையை கடத்தியதாக திருப்போரூரை சேர்ந்த சங்கீதா(26) மற்றும் கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்த வசந்தராஜ் என்கிற பிரகாஷ் (31) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சங்கீதா திருமணமாகி 8 ஆண்டுகளான பின்னரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்தார். குழந்தை மீது ஆசைப்பட்டு அவர் பல அனாதை இல்லங்களில் குழந்தை கேட்டு ஏமாற்றத்தில் இருந்தார். சோதனை குழாய் மூலம் குழந்தை பேறு பெறவும் முயற்சி செய்துள்ளார்..இருப்பினும் குழந்தை பேறு இல்லாத நிலையில் செய்யூரை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன் (24) என்பவரிடம் கேட்டபோது தனது உறவினரின் குழந்தையை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி குழந்தை ஹரிணியை அவர் கொண்டு வந்தார். நரிக்குறவர் குழந்தை என்பது தெரியாமல் சங்கீதா அந்த குழந்தைக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். வீரபாண்டியன் மேலும் அதிக பணம் கேட்டு சங்கீதாவை வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் குழந்தை மீட்கப்பட்டு சங்கீதா மற்றும் வசந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். வசந்த்ராஜ் மதுராந்தகம் கிளை சிறையிலும், சங்கீதா சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். வீரபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story