மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பும் விவசாயிகள் மாணவர்களும் பங்கேற்பு


மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பும் விவசாயிகள் மாணவர்களும் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Jan 2019 11:00 PM GMT (Updated: 10 Jan 2019 8:28 PM GMT)

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள் பிரதமருக்கு 1 லட்சம் தபால் கார்டுகளை அனுப்பி வருகின்றனர்.

லாலாப்பேட்டை,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது, தமிழக விவசாயிகளிடையே கடும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காது.

எனவே, அணை கட்டும் முடிவை கர்நாடக அரசும், மத்திய அரசும் கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கோரிக்கையினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அது தொடர்பாக 1 லட்சம் தபால் கார்டுகளை புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும் செயலை கரூர் மாவட்ட விவசாயிகள் நேற்று மேற்கொண்டனர். இதில், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

மகாதானபுரத்தை சேர்ந்த காவிரி டெல்டா பாசன மாவட்ட சங்க தலைவர் ராஜாராம் தலைமையில், விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் மகாதானபுரம் தபால் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் கோரிக்கை எழுதப்பட்ட தபால் கார்டுகளை போட்டனர். அந்த தபாலில், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கும் விதமாக இருக்கிறது. எனவே இதனை முற்றிலும் கைவிட வேண்டும். எந்த ஒரு காவிரி பாசன மாநிலமும் தன்னிச்சையாக அணைகள் கட்ட அனுமதிக்காதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கரூர் அருகே திம்மாச்சிபுரம் மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் சார்பில் மோடிக்கு தபால் கார்டு அனுப்பப்படுகிறது. 

Next Story