இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை


இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்திச்செல்ல 2 வாகனங்களில் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸ் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து வந்த 2 மினி சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் பீடி இலை பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது 2 வாகனங்களிலும் தலா 30 கிலோ எடையுள்ள 33 பண்டல்கள் பீடி இலைகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வேனில் வந்தவர்களை பிடித்து விசாரித்தபோது டிரைவர்கள் தூத்துக்குடி பேரூரணி வடக்குத்தெரு ராஜேஸ்குமார்(வயது22), பேரூரணி சமத்துவபுரம் மாரியப்பன்(27) என்பதும், உடன் வந்த நபர் பீடிஇலைகளை கடத்தி செல்லும் புரோக்கரான தூத்துக்குடி ஸ்தூபிபுரம் கணேசன்(36) என்பதும் தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பீடி இலைகள் காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இந்த வாகனங்களில் இருந்த ஆவணங்களை பரிசோதித்து பார்த்தபோது பீடி பண்டல்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த நிறுவனத்தின் சார்பில் இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் போலீசார் பிடிபட்ட 3 பேரையும் வாகனங்கள் மற்றும் பீடி இலைகளுடன் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story