மாவட்ட கல்வித்துறை தயாரித்துள்ள அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படம்


மாவட்ட கல்வித்துறை தயாரித்துள்ள அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:08 PM GMT)

தேனி மாவட்ட கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படத்தை அரசு பள்ளி மாணவிகள் வெளியிட்டனர்.

தேனி,

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவின் வழிகாட்டுதலின்படி, அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படம் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், அரசு பள்ளிகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘நான் அரசு பள்ளி மாணவன்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தை லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மனுவேல் இயக்கி உள்ளார். இந்த ஆவணப்படம் தயாரிப்பு பணிகள் முழுமை பெற்றதை தொடர்ந்து நேற்று இந்த படம் வெளியிடும் நிகழ்ச்சி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அலுவலர்கள் கணேஷ், ராகவன், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படத்தை கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளே வெளியிட்டனர்.

தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்த ஆவணப்படம் ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு, மாணவ, மாணவிகளின் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கலைத்திறன் மேம்பாட்டு போட்டிகள், அரசு நலத்திட்டங்கள் உள்பட பல்வேறு அம்சங்களை இந்த படம் உள்ளடக்கி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2 விழிப்புணர்வு பாடல்கள், தேனியின் அழகு மற்றும் முக்கிய இடங்களை சிறப்பித்து ஒரு பாடல் என மொத்தம் 3 பாடல்கள் இதில் இடம் பிடித்துள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தேனி மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு தொடங்க உள்ள கல்வித் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், உள்ளூர் தொலைக் காட்சிகள் மூலமும் ஒளிபரப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஆவணப்படத்தில் இணை இயக்குனராக சிவாஜி, உதவி இயக்குனராக செந்தில்குமார், துணை இயக்குனராக கருணாநிதி, ஆசிரிய-ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளனர். புனிதன் என்பவர் இசை அமைத்துள்ளார்’ என்றனர். 

Next Story
  • chat