கிணற்று தண்ணீரை விற்பவர் மீது நடவடிக்கை கோரி மனு பெரம்பலூர் கலெக்டரிடம், விவசாயிகள் கொடுத்தனர்


கிணற்று தண்ணீரை விற்பவர் மீது நடவடிக்கை கோரி மனு பெரம்பலூர் கலெக்டரிடம், விவசாயிகள் கொடுத்தனர்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கிணற்று தண்ணீரை விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 215 மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பெரம்பலூர் தாலுகா புதுவேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஒருவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் தண்ணீரை விவசாயத்திற்கு அதிகமாக பயன்படுத்தாமல், விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

இதனால் அவர் கிணற்றை சுற்றி சுமார் 20 விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீரும் வற்றி போகிறது. இதனால் போதிய தண்ணீர் இல்லாமல் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் கிணற்றின் தண்ணீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள புதுக்காலனியில் ஒரு இடத்தில் சுகாதாரமற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதில் சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. எனவே அந்த இடத்தை தூய்மைப்படுத்தி, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், படித்த ஏராளமானவர்கள் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு பணிகள் நேரடியாக விண்ணப்பம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைக்காக பதிவு செய்தவர்கள் வேலை கிடைக்காமல் பதிவு மூப்பு கடந்து காலாவதியான விரக்தியில் உள்ளனர். எனவே மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூட வேண்டும் அல்லது அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் குறிப்பிட்ட நிதி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 231 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

Next Story