வீரபாண்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன் கைது


வீரபாண்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 10:30 PM GMT (Updated: 21 Jan 2019 9:39 PM GMT)

வீரபாண்டி அருகே தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பிரிவுக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலை நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அத்துடன் போலீஸ் துணை கமி‌ஷனர் உமா மற்றும் திருப்பூர் தெற்கு உதவி கமி‌ஷனர் நவீன்குமார் ஆகியோர் அங்கு வந்தனர்.

அங்கு பிணமாக கிடந்தவர் கழுத்தில் மதுபாட்டிலால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன் அவரது சட்டைப்பையில் இருந்த ஆதார் அடையாள அட்டையை கைப்பற்றிய போலீசார் அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் செல்லம் நகர் பாறைக்காடு பகுதியை சேர்ந்த தர்மராஜ்–காமாட்சி தம்பதியின் 2–வது மகன் விக்னேஷ் என்பது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விக்னேஷின் அண்ணன் பிரகாஷ் (28) தலைமறைவாகி இருப்பதும், அவருடைய செல்போன் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரகாசை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் பிரகாஷின் செல்போன் எண் மூலம் போலீசார் துப்புதுலக்கியதில் அவர் இருப்பிடம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்லம் நகர் இடுவம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு டீக்கடையில் பிரகாஷ் நிற்பது தெரியவந்தது. எனவே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது தம்பியை பிரகாஷ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பிரகாஷை போலீசார் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் பிரகாஷ் கூறியிருப்பதாவது:–

நான் (பிரகாஷ்) கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். எனது தம்பி விக்னேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவான். அப்போது தாயார் காமாட்சியிடம் தகராறு செய்வது உண்டு. இதை பலமுறை கண்டித்தும் அவன் திருந்தவில்லை. இதனால் அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று எனது தம்பியை அழைத்துக்கொண்டு மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்றேன். அங்கு அவனுக்கு மது வாங்கி கொடுத்தேன். அப்போது குடிபோதையில் இருந்த விக்னேஷ் தாயாரை தரக்குறைவாக பேசினான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மதுபாட்டிலை உடைத்து அவனது கழுத்தில் சரமாரியாக குத்தினேன். இதில் விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டதை அறிந்ததும் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு பிரகாஷ் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு பிரகாஷை அழைத்துச்சென்றனர். அங்கு நடந்ததை பிரகாஷ் போலீசாருக்கு விளக்கி கூறினான்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் மணிமொழியை துணை கமி‌ஷனர் உமா பாராட்டினார்.


Next Story