ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் ஆனந்த்சிங்கை தாக்கியதாக கணேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்


ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் ஆனந்த்சிங்கை தாக்கியதாக கணேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:29 PM GMT (Updated: 21 Jan 2019 10:29 PM GMT)

ராமநகர் அருகே ரெசார்ட்டில் வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதிக்கொண்டனர். இதில் ஆனந்த்சிங்கை தாக்கியதாககணேஷ் மீது 5 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கணேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தனிப்படைபோலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து பா.ஜனதா ஆட்சி அரியணையில் அமர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட்டில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 19-ந் தேதி இரவு ரெசார்ட்டில் வைத்து பல்லாரி மாவட்ட எம்.எல். ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இந்த வேளையில் கம்பளி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ், விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது/

இதில் காயமடைந்த ஆனந்த்சிங் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கணேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மறுத்தனர்.

இந்த நிலையில் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழ் போலீசாரிடம் வழங்கப்பட்டது. மேலும் டாக்டர்களிடம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. தனக்கு எப்படி அடிப்பட்டது என்பது குறித்து கூறியுள்ளார்.

இந்த விசாரணையின்போது, ‘கடந்த 19-ந் தேதி இரவு உணவை சாப்பிட்டு அறைக்கு திரும்பினேன். அப்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எனக்கு உதவி செய்யவில்லை என்று கணேஷ் என்னிடம் பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும், என் அக்காள் மகன் சந்தீப்பை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். குடும்பத்தை பற்றி பேசாதே என்று கூறியபோது பூந்தொட்டி மற்றும் தடியால் தாக்கினார். கையால் முகத்தில் குத்தினார். கீழே தள்ளி ‘சாவு... சாவு... சாவு...’ என்று கூறி மிதித்தார்.

அத்துடன் துப்பாக்கியை எடுத்து இங்கேயே கொன்று விடுவதாகவும் மிரட்டினார். என்னை மந்திரி துகாராம், எம்.எல்.ஏ.க்களான ரகுமூர்த்தி, ராமப்பா, தன்வீர்சேட் ஆகியோர் காப்பாற்றினர். இல்லாவிட்டால் அவர் என்னை கொன்று இருப்பார்’ என்று ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கூறியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணேஷ் எம்.எல்.ஏ. மீது பிடதி போலீசார் நேற்று 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 323 (தாக்குதல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 307 (கொலை முயற்சி), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவித்து அவமானப்படுத்துதல்), 506 (குற்றமிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கணேஷ் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story