அருப்புக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் கைது: நகைக்காக கழுத்தை அறுத்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்


அருப்புக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் கைது: நகைக்காக கழுத்தை அறுத்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Feb 2019 11:00 PM GMT (Updated: 2 Feb 2019 8:04 PM GMT)

அருப்புக்கோட்டை பெண் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர். நகைக்கு ஆசைப்பட்டு கழுத்தை அறுத்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி பாவடி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கனகவள்ளி. வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன் தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன. எனவே நகைக்காக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (அருப்புக்கோட்டை டவுன்), செல்லப்பாண்டியன் (குற்றப்பிரிவு), அன்னராஜ் (தாலுகா) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கனகவள்ளியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் அவரது உறவினர் அன்புநகர் பாண்டியராஜனை (45) தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் அவவவ போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் பாண்டியராஜன் தனது நண்பர்கள் மலையரசன்கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (34), புளியம்பட்டியைச் சேர்ந்த பெட்டிசன் கணேசன் (52) ஆகியோருடன் சேர்ந்து கனகவள்ளியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான பாண்டியராஜன் போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலம் வருமாறு:–

கனகவள்ளியின் கணவர் பாலசுப்பிரமணியன் வேலைக்காக கேரளா சென்று விட்டார். மகன் அருணகிரி மனைவியுடன் தனியாக வசிக்கிறார். இதனால் கனகவள்ளியின் வீட்டுக்கு தேவையான பொருட்களை நான்தான் வாங்கிக் கொடுத்தேன். இதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது கனகவள்ளி அணிந்திருந்த நகைகளை பார்த்தபோது அதனை பறிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இது பற்றி நண்பர்கள் ராஜா, பெட்டிசன் கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன்.

நேற்று முன் தினம் காலை கனகவள்ளி வீட்டுக்கு சென்று வந்த நான் அவர் தனியாக இருப்பதை அறிந்து ராஜாவை அனுப்பினேன். அவர் கனகவள்ளியை கத்தியால் அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டோம். பெட்டிசன் கணேசன் ஆலோசனைப்படி நகைகளை வீட்டின் மீட்டர் பெட்டிக்குள் மறைத்து வைத்தோம். ராஜாவிடம் ரூ.500 கொடுத்து மதுரைக்கு சென்று விடுமாறு கூறினேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

பெண் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். இதனை போலீஸ் உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.


Next Story