பணத்தகராறில் தொழில் அதிபர்- மகன் வெட்டிக்கொலை அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 10 பேருக்கு போலீசார் வலைவீச்சு


பணத்தகராறில் தொழில் அதிபர்- மகன் வெட்டிக்கொலை அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 10 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 7:35 PM GMT)

புதுக்கோட்டை அருகே பணத்தகராறில் தொழில் அதிபர்-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). தொழில் அதிபரான இவர், அப்பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் கியாஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மகன் முத்து (30). இவர் அப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியை கவனித்து வந்தார்.

களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு களமாவூரில் வயல் மற்றும் தோட்டம் உள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீராச்சாமியிடம், மூர்த்தி ரூ.1 கோடியே 25 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதையடுத்து சில மாதங்கள் கழித்து கொடுத்த பணத்தை வீராச்சாமி திரும்பி கேட்டு உள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் மூர்த்தி காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

பின்னர் வாங்கிய பணத்திற்கு பதிலாக நிலத்தை எழுதி கொடுக்க மூர்த்தி ஏற்பாடு செய்தார். இதையடுத்து பணத்திற்கு பதிலாக மூர்த்தி தனது தோட்டத்தை வீராச்சாமிக்கு எழுதி கொடுத்தார். நிலத்தை எழுதி கொடுத்து பல நாட்கள் ஆகியும் அங்கிருந்து மூர்த்தி நிலத்தை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக 2 தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இது தொடர்பாக 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு வீராச்சாமி, அவரது மகன் முத்து மற்றும் உறவினர்கள் 4 பேர் பேச்சுவார்த்தைக்காக 2 கார்களில் வந்துள்ளனர்.

பின்னர் தோட்டத்தில் உள்ள மரத்தடி நிழலில் கட்டில், பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு அதில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வார்த்தைகள் முற்றிப்போய் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அரிவாள், கம்பு ஆகியவற்றுடன் தயாராக இருந்த மூர்த்தி தரப்பினர் வீராச்சாமி அவரது மகன் முத்து மற்றும் உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் வீராச்சாமியின் உறவினர்களில் 2 பேருக்கு லேசான அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே வீராச்சாமியின் உறவினர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஆனால் மூர்த்தி தரப்பினர் வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்துவை குறிவைத்து ஓட, ஓட தோட்டத்தில் விரட்டி உள்ளனர். அப்போது அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடியே ஓடி உள்ளனர்.

பின்னர் வீராச்சாமி, முத்து இருவரையும் பிடித்து கழுத்து பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் தந்தையும், மகனும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே மூர்த்தி தரப்பினர் வீராச்சாமி வந்த 2 காரையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் இடத்தை புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டு செல்வராஜ் பார்வையிட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் 2 பேரையும் வெட்டிக்கொலை செய்தது மூர்த்தி தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல் என போலீசார் கூறினர். தலைமறைவான அந்த 10 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட முத்துவுக்கு திருமணமாகி கயல்விழி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பணத்தகராறில் தந்தை- மகன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story