மதுரை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் தீ - வேறு வார்டுக்கு மாற்றிய நோயாளி சாவு
மதுரை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றியது. இதனால் வேறு வார்டுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர். அதில் ஒரு நோயாளி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு, மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மிகவும் அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவான 115-வது வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும்.
நேற்று முன்தினம் இந்த வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 6 நோயாளிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களுக்கு ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நள்ளிரவில் அந்த வார்டில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வென்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்ட நோயாளிகள் மூச்சுவிட திணறினார்கள். இதனால் அங்கு ஒரு வித பதற்றமான நிலை ஏற்பட்டது.
பணியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வார்டில் இருந்த நோயாளிகளை உடனடியாக 118-வது வார்டுக்கு மாற்றினார்கள். பணியில் இருந்த ஊழியர்கள் அந்த வார்டில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர். அதற்குள் வார்டில் தீப்பற்றியது.
உடனே ஊழியர்கள் தீயணைப்பு கருவிகள் மூலம் அந்த தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேறு வார்டுக்கு மாற்றப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கும் படி டாக்டர்களுக்கு, ஆஸ்பத்திரி டீன் வனிதா உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த தீ விபத்தினால் 115-வது வார்டில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்ட மேலஅனுப்பானடியை சோந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தனிக்கொடி (வயது 66) சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். அவர் இந்த தீ விபத்தினால் தான் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா கூறுகையில், “இறந்து போன தனிக்கொடிக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் கடந்த டிசம்பர் 24-ந்தேதி தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு சிசிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் 13-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது இருந்தே அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். தீ விபத்திற்கும் அவரது இறப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை“ என்று கூறினார்.
Related Tags :
Next Story