அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சி வாலிபர் கைது


அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2019 4:45 AM IST (Updated: 8 Feb 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பரமேஸ்வரி. இவருடைய கணவர் முருகன். பரமேஸ்வரியின் தாய் வீடு மண்ணச்சநல்லூரில் கல்பாளையம் சாலையில் உள்ளது. திருமணமாகி கணவரின் ஊரான தெற்கு தத்தமங்கலத்தில் குடியிருந்து வந்த பரமேஸ்வரி, எம்.எல்.ஏ. ஆனபிறகு மண்ணச்சநல்லூரில் எதுமலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார்.மேலும் அதற்கு அருகிலேயே அவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணியை விரைந்து முடிப்பதற்கு வசதியாக அவர் அங்கேயே தங்கியிருந்து வருகிறார். இதன் காரணமாக அவருடைய கணவர் முருகன், தினமும் காலையில் தத்தமங்கலத்திற்கு சென்று வீட்டில் குளித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வருவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தத்தமங்கலத்தில் உள்ள பரமேஸ்வரி எம்.எல்.ஏ. வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்த 3 மர்ம நபர்கள் உள்ளே சென்று, வீட்டின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்தனர். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று, அங்கிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர், அவர்கள் வந்த மொபட்டில் தப்பிச் சென்றுவிட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார்.

இந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ.வுக்கு, அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, அவருடைய கணவர் முருகன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள், கொள்ளை முயற்சி நடந்த தத்தமங்கலம் வீட்டிற்கு சென்றனர். மேலும் இதுபற்றி சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பைஞ்சீலி, கணேசபுரத்தை சேர்ந்த மறைந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆங்கியத்தார் ராஜேந்திரனின் மகன் கார்த்திக் (வயது 28) என்பதும், அவருடன் வந்த 2 பேரும் சேர்ந்து, எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

தப்பி ஓடிய 2 பேர் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார்த்திக்கிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் 4 சிம்கார்டுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எம்.எல்.ஏ.விடமும் நடந்த சம்பவம் குறித்து போலீசார் கேட்டறிந்தனர்.

சம்பவ இடத்திற்கு திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பிரபு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கொள்ளை முயற்சி குறித்து எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து, லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் தப்பி ஓடியவர்கள், பழைய திருடர்களா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.

மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை முயற்சியிலும், சமயபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியிலும் கார்த்திக் உள்பட 3 பேருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story