தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்


தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 7:02 PM GMT)

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

கும்பகோணம், 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 28-ந் தேதி சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் வேல் முருகன் கலந்து கொண்டு, பேரணி குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். கூட்டணி பற்றி அடுத்த மாதம் (மார்ச்) நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய மின் தொகுப்பு, இந்திய எண்ணெய் எரிவாயு கழகம், சென்னை விமான நிலையம் உள்ளிட்டவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தமிழருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை. இந்தி மொழி பேசுபவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான தொழில் நிறுவனங்களிலும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகிறார்கள்.

தமிழக அரசு அலுவலகங்களிலும், தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் செயல்படுகிற கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை.

ஆகவே தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் வகையில் தமிழக அரசின் அலுவலகங்களில் 100 சதவீதமும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதமும், தனியார் நிறுவனங்களில் 90 சதவீதமும் தமிழர்களை பணி அமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எளிதாக வேலை பார்க்க முடியும். கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கோரி வருகிற 28-ந் தேதி சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story