விருதுநகர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை: “மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றதால் தீர்த்துக் கட்டினேன்” கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்


விருதுநகர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை: “மகளிடம் அத்துமீறி நடக்க முயன்றதால் தீர்த்துக் கட்டினேன்” கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:36 AM IST (Updated: 12 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அழகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளந்திரி,

விருதுநகர் இந்திராநகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68). ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 3–ந்தேதி மதுரை அருகே உள்ள அழகர்கோவிலுக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 12 வயது சிறுமி, 11 வயது சிறுவன் ஆகியோருடன் வந்தார். அழகர்கோவிலில் சாமி தரிசனம் செய்விட்டு அங்குள்ள விடுதி ஒன்றில் அவர்கள் தங்கினர். இந்த நிலையில் தங்கராஜ் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவருடன் வந்த 3 பேரும் மாயமாகி விட்டனர். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தங்கராஜூடன் தங்கிய பெண்ணுக்கும், தங்கராஜூக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

அந்த பெண் தனது மகன், மகளுடன் மதுரைக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண், தங்கராஜை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சென்னை, விருதுநகர், நெல்லை பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது நெல்லை அருகே உள்ள முக்கூடலில் அந்த பெண் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். இதில் அந்தப்பெண் காஞ்சீபுரம் மாவட்டம், மருராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவருக்கும், தங்கராஜூக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இதில் அந்தப்பெண் அவரை கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில், நேற்று காலை 8 மணி முதல் போலீசார் அந்தப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் அவர் போலீசாரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து மதியம் மீண்டும் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பான தகவல்களை அவர் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

தங்கராஜூக்கு சொந்தமான வீட்டில் அந்தப்பெண்ணின் தாயார் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், தங்கராஜூக்கும் தொடர்பு ஏற்பட்டது. மேலும் அந்தப்பெண்ணுக்கு, பல முறை அவர் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. சம்பவத்தன்று தங்கராஜ் அழகர்கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் அவர், அந்தப்பெண்ணை போனில் தொடர்பு கொண்டு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரும், அவரது மகள், மகன் ஆகியோரும் அழகர்கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த தங்கராஜ், அந்தப் பெண்ணின் மகளிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றாராம். இதில் ஆத்திரம் அடைந்த அந்தப்பெண், அவரை கொலை செய்துள்ளார்.

இவ்வாறு அந்தப்பெண் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அப்பெண்ணின் கணவர், சகோதரர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story