சிவகாசியில் 3–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஆர்.டி.ஓ. நேரில் வந்து கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்


சிவகாசியில் 3–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஆர்.டி.ஓ. நேரில் வந்து கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 10:33 PM GMT)

சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் 3–வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். முடிவில் ஆர்.டி.ஓ. நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

சிவகாசி,

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள், பட்டாசு தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டு வரும் பலர் கடந்த 11–ந்தேதி தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் 2–வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

நேற்று காலை 3–வது நாள் போராட்டம் தொடங்கியது. போராட்டம் தொடங்கியபோதே மைதானத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடியிருந்தனர். இதனால் போராட்ட களத்தில் உற்சாகம் பிறந்தது. போராட்டத்தை வழி நடத்திய நிர்வாகிகள் அனைவரது மத்தியிலும் பேசினர். அதை தொடர்ந்து பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் 20–க்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாததால் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது அங்கு வந்த சங்கர்–சந்தியா தம்பதியின் 4 வயது மகள் அதிரா தனது தாத்தா குமாருடன் மேடை ஏறி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌ஷம் போட்டாள். அவளுக்கு பட்டாசு தொழிலாளர்கள் எழுந்து நின்று நன்றி தெரிவித்தனர்.

மதியம் 2 மணிக்கு தொடர் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர். மேடையில் சிவகாசி நகருக்கு பட்டாசுகளை அறிமுகம் செய்த காகா சண்முக நாடார், அய்யநாடார் ஆகியோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தை முடித்த பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ஊர்வலமாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இதை தொடர்ந்து சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். அவரிடம் போராட்டக்குழுவினர் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை மனுவையும், கவர்னருக்கு ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. தினகரன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த கோரிக்கை மனுக்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த 3 நாள் போராட்டம் குறித்து பட்டாசு வணிகர்கள் சங்க தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் எதிர்பார்த்தபடி போராட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. பட்டாசு தொழிலை காப்பாற்றக் கோரி ஜனாதிபதி, கவர்னருக்கு, சிவகாசி ஆர்.டி.ஓ. மூலம் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும். அந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வருகிற தீபாவளிக்கு பட்டாசு இல்லாமல் போய்விடும்.

அடுத்தடுத்த காலங்களில் பட்டாசு என்பது மறந்தே போகும். நமது கலாசாரத்தை அழியவிடக்கூடாது. பட்டாசு தொழிலை காப்பாற்ற அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த உள்ளோம். இந்த தொழிலை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அதை முதல்–அமைச்சர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இறுதி தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கிய இடைக்கால உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். இறுதி தீர்ப்பு ஏற்படும் வரை ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி பட்டாசு தயாரிக்கவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story