நகை தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
விழுப்புரத்தில் நகை தொழிலாளி கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் மணிகண்டன் (வயது 35). இவருடைய மனைவி வைஷ்ணவி (27), மகன் யோகேஷ் (4). மணிகண்டன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் ஜால்னா முதலியார் தெருவில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து விழுப்புரம் மேல்தெருவில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் கடந்த 1-ந்தேதியன்று தனது வீட்டில் திடீரென இறந்து கிடந்தார். இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி வைஷ்ணவி கூறியதையடுத்து அவரது உறவினர்கள் விழுப்புரம் வந்து கே.கே.சாலையில் உள்ள சுடுகாட்டில் மணிகண்டனின் உடலை புதைத்தனர்.
இந்த சூழ்நிலையில் மணிகண்டனின் இறப்பிற்கு பிறகு வைஷ்ணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் மணிகண்டனின் அண்ணன் தண்டபாணி விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வைஷ்ணவியிடம் போலீசார் விசாரித்தபோது அவருக்கும், மணிகண்டனின் நண்பரான விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்த நகை தொழிலாளியான குருமூர்த்திக்கும் (37) கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மணிகண்டனை குருமூர்த்தி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், குருமூர்த்தியை பிடித்து தீவிர விசாரணை செய்ததில் அவர், மணிகண்டனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம் குருமூர்த்தி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நகை தொழில் விஷயமாக நானும், மணிகண்டனும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த பழக்கத்தின் அடிப்படையில் நான் அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது எனக்கும் மணிகண்டனின் மனைவி வைஷ்ணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
அப்போது கோவைக்கு சென்று தனியாக குடும்பம் நடத்தலாம் என்று கூறி தன்னுடன் வருமாறு வைஷ்ணவியை அழைத்தேன். அதற்கு அவர் கணவரையும், குழந்தையையும் விட்டுவிட்டு வர முடியாது எனக்கூறினார். இதனால் தனது கள்ளக்காதலுக்கு மணிகண்டன் இடையூறாக இருப்பதாக கருதி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று மணிகண்டன் வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலில் அவருக்கு தெரியாமல் விஷத்தை கலந்துவிட் டேன். மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற மணிகண்டன், சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், குருமூர்த்தியை கைது செய்ததோடு மணிகண்டனின் சாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மணிகண்டனின் மனைவி வைஷ்ணவியையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story