இலங்கைக்கு கடத்த இருந்த 1¾ டன் பீடி இலைகள் பறிமுதல் 3 பேர் கைது


இலங்கைக்கு கடத்த இருந்த 1¾ டன் பீடி இலைகள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2019 5:13 AM IST (Updated: 24 Feb 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 1¾ டன் பீடி இலைகளை ராமேசுவரம், மண்டபத்தில் சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் சுங்க இலாகாவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சுங்க இலாகா இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், முனியசாமி ஆகியோர் தலைமையில் பெர்னாண்டோ, சிவராமன், கென்னடி, சோமநாதன், காந்தி உள்ளிட்ட சுங்க இலாகாவினர் சங்குமால், ஓலைக்குடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சுங்கா இலாகாவினர் மறித்தபோது நிற்காமல் சென்றது. உடனே அந்த வாகனத்தை விரட்டி பிடித்து சோதனையிட்டபோது அதில் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தின் டிரைவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 33), கீழக்கரையை சேர்ந்த மாரியப்பன் மகன் வேல்முருகன் (20) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து ஒருவர் இந்த மூடைகளை ஏற்றி ராமேசுவரம் சங்குமால் கடற்கரைக்கு சென்று செல்வம் என்பவரை தொடர்பு கொண்டு ஒப்படைக்கும்படி கூறியதாகவும், அதனை தொடர்ந்து இந்த மூடைகளை கொண்டுவந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் பீடி இலைகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த சுங்க இலாகாவினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதேபோல மண்டபம் அருகே குஞ்சார்வலசையில் ஒரு சரக்குவாகனத்தை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 25 மூடைகளில் சுமார் 700 கிலோ பீடி இலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பரமக்குடி கிளியூரை சேர்ந்த முருகேசுவரன் (27) என்பவரை கைது செய்தனர். சரக்கு வாகனம் பறிமுதல் செய்யபட்டது.

Next Story