ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது அன்வர்ராஜா எம்.பி. பேட்டி


ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது அன்வர்ராஜா எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 7:47 PM GMT)

ஜெயலலிதா வழியில் அரசியல் சாணக்கியதனத்தால் அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது என்று அன்வர்ராஜா எம்.பி. கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:– நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை அ.தி.மு.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதுடன் இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக தி.மு.க. எடுத்து வரும் பல்வேறு சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எனவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் அரசியல் மிகவும் சாணக்கியத்தனத்தால் சாதுர்யமாக பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைகள் உண்டு. அந்த கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் வெற்றி மட்டுமே குறிக்கோள். அதற்காகத்தான் அ.தி.மு.க. இந்த மெகா கூட்டணியை அமைத்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை. இந்தியாவை பொறுத்தவரை நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாய் ஆகியோருக்கு பின்பு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக மோடி விளங்குகிறார். பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

எனவே மத்தியில் பா.ஜ.க. அரசு தொடரவேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். அதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியை நான் எதிர்ப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவும் உண்மை இல்லை. அ.தி.மு.க. தலைமை எடுத்த கூட்டணி முடிவை அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அ.தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்தே அதில் நான் பணியாற்றி வருகிறேன். அரும்பாடுபட்டு ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சி தி.மு.க.வின் சூழ்ச்சியால் கவிழ்க்கப்பட்டு விடக்கூடாது. எனவே இந்த கூட்டணியை அனைவரும் ஏற்றுக்கொண்டு 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story