சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மிதவை, படகுகள் உடைப்பு அதிகாரிகள் நடவடிக்கை


சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மிதவை, படகுகள் உடைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 March 2019 10:30 PM GMT (Updated: 7 March 2019 6:13 PM GMT)

வில்லியனூர் கணுவாய்பேட்டை சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மிதவை, படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடைத்தனர்.

வில்லியனூர், 

வில்லியனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் திருடப்படுவதை தடுக்க வருவாய்த்துறை, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் இரவு நேரங்களில் இரும்பு பேரல்களால் மிதவை தயாரித்து தண்ணீரில் மிதக்க விட்டு நீண்ட மண்வெட்டியை பயன்படுத்தி அதில் மணலை சேகரித்து மீன்பிடி படகுகளில் கரைக்கு கொண்டு வருகிறார்கள்.

பின்னர் டிப்பர் லாரி மூலம் வெளியூர்களுக்கு மணலை கடத்தி வருகின்றனர். இந்த நூதன மணல் கொள்ளையை தடுக்க துணை தாசில்தார் நித்யானந்தம் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் வில்லியனூர் போலீசார் நாள்தோறும் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகர் பகுதி சங்கராபரணி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு துணை தாசில்தார் நித்யானந்தம், போலீசார் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன், ஏட்டு எழில்ராஜ், அர்ச்சுனன், ஸ்ரீராம், கவியரசன், விஷ்ணு மற்றும் போலீசார் இணைந்து நூதன முறையில் மணல் கொள்ளை நடக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆற்றின் நடுப்பகுதியில் ஆகாய தாமரை செடிகள் மற்றும் புல்களின் அடியில் இரும்பு பேரலால் ஆன மிதவை, 4 மீன்பிடி படகுகள், மண்வெட்டி ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்த அதிகாரிகள் ஆற்றுக்குள் இறங்கி அந்த மிதவை, 4 படகுகளை பறிமுதல் செய்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை சங்கராபரணி ஆற்றுக்கு வந்து படகுகளில் இருந்த மணலை கைப்பற்றி புதுவை கட்டுமான மையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பொக்லைன் எந்திரம், கோடரி மூலம் மணல் திருட பயன்படுத்தப்பட்ட படகுகள், மிதவையை போலீசார் உடைத்து அப்புறப்படுத்தினர்.

Next Story