கிருஷ்ணகிரியில் கணவன் கண் முன்பு துணிகரம்: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு


கிருஷ்ணகிரியில் கணவன் கண் முன்பு துணிகரம்: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 March 2019 10:15 PM GMT (Updated: 16 March 2019 8:33 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் அவரது கணவன் கண் முன்பே கத்தியை காட்டி நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மனைவி குல்நாத் (வயது 40). சம்பவத்தன்று அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 20 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் வந்தனர்.

பின்னர் அவர்கள் அக்பரின் கண் முன்பே கத்தியை காட்டி மிரட்டி அவரது மனைவி குல்நாத் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் குல்நாத் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தீவிரமாக தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த அந்த வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காவேரிப்பட்டணம் குண்டல்பட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மணி (20), திருப்பதி மகன் அசோக் (18) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் தான் குல்நாத்திடம் நகையை பறித்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story