கோத்தகிரி அருகே, கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்


கோத்தகிரி அருகே, கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 10:00 PM GMT)

கோத்தகிரி அருகே கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து கோடநாடு காட்சிமுனைக்கு செல்லும் சாலையோரத்தில் எஸ்.கைகாட்டி உள்ளது. இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் என்பவரது பேக்கரிக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று கரடிகள் அட்டகாசம் செய்தன. இந்த சம்பவம் 3 முறை நிகழ்ந்தது. இதையடுத்து வனத்துறையினரின் அறிவுரையின்பேரில் பேக்கரியில் இரும்பு ஷட்டர் அமைக்கப்பட்டது.

அதன்பின்னரே கரடிகள் பேக்கரிக்குள் புகுவது தடுக்கப்பட்டது. இருப்பினும் அதே பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரியும் கரடிகளை அவ்வப்போது பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எஸ்.கைகாட்டியில் உள்ள கக்குளா மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன. கதவை உடைத்து உள்ளே சென்ற கரடிகள், அங்கிருந்த பொருட்களை சிதறடித்தன. மேலும் விளக்குகளில் ஊற்றி வைத்திருந்த எண்ணெயை குடித்துவிட்டு சென்றன. நேற்று காலையில் சாமி கும்பிட வந்த பக்தர்கள் கோவிலுக்குள் கரடிகள் அட்டகாசம் செய்திருப்பதை கண்டு கவலை அடைந்தனர். இதுகுறித்து எஸ்.கைகாட்டி பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் வசிப்பதால் அவர்கள் பணிக்கு செல்லும்போதும், பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போதும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றித்திரியும் கரடிகளால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பத்திரமாக வீடு திரும்புவதற்குள் பெற்றோர் அச்சத்தில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. தினமும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் இணைந்து சாலைமறியல் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story