போக்குவரத்து சிக்னல் அருகே நின்று புதுவையில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் நூதன பிரசாரம் ‘வாக்களிப்பது ஜனநாயக கடமை’


போக்குவரத்து சிக்னல் அருகே நின்று புதுவையில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் நூதன பிரசாரம் ‘வாக்களிப்பது ஜனநாயக கடமை’
x
தினத்தந்தி 19 March 2019 3:28 AM IST (Updated: 19 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலின்போது வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் சிக்னலுக்காக காத்து நின்றவர்களிடம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் தேர்தல் கமி‌ஷன் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. கல்லூரி மாணவ–மாணவிகள், முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையம், சந்தைப் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி பூமியான்பேட்டில் உள்ள மதர் சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவ–மாணவிகள் 20–க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை இந்திராகாந்தி சிலை அருகே வந்தனர். அங்கு சிக்னலுக்காக காத்து நின்ற வாகன ஓட்டிகளிடம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ‘அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் பிரசாரம் செய்தனர். இந்திராகாந்தி சிலை போக்குவரத்து சிக்னலுக்காக வாகனங்களில் காத்திருந்தவர்களிடம் இந்த பதாகைகளை காட்டி ஓட்டளிக்கும்படி வலியுறுத்தினார்கள். ‘எல்லோரும் ஓட்டு போடுங்கள்’ என்று அவர்கள் குரல் எழுப்பியும் பிரசாரம் செய்தனர்.

மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மூலம் நடத்திய இந்த விழிப்புணர்வு பிரசாரம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதற்கான ஏற்பாட்டை சிறப்பு பள்ளி செயலாளர் ஜெகதீஸ்வரி மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பிரசாரம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.


Next Story