கலபுரகியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் : மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு


கலபுரகியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் : மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 18 March 2019 11:40 PM GMT (Updated: 18 March 2019 11:40 PM GMT)

கலபுரகியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது “திருடி பிடிபட்டதும் எல்லோரையும் காவலாளி ஆக்கிவிட்டார்” என்று பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இரண்டு கட்டமாக 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதியும் 2-வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 23-ந்தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் கலபுரகியில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, தன்னை பிரதமராக தேர்வு செய்யாமல், காவலாளியாக தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சமீபகாலம் வரை, அவர் தன்னை காவலாளி என்றும், ஊழலுக்கு எதிராக தனியாக போராடுவதாகவும் கூறி வந்தார்.

ஆனால், ரபேல் விவகாரத்தில், திருடி மாட்டிக்கொண்டவுடன், ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை தொடங்குமாறு அனைவரையும் வற்புறுத்தி வருகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த நாட்டையும் காவலாளி ஆக்கி விட்டார்.

ரபேல் விவகாரத்தில், தன்னுடைய நண்பரான அனில் அம்பானியை கொள்ளையடிக்க அனுமதித்தார். ஏழைகள், நடுத்தர மக்கள் ஆகியோரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோரின் பாக்கெட்டில் போட்டார். இதெல்லாம் மக்கள் பணம்.

இவர்களில் சிலர் கோடிக்கணக்கான ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடி விட்டனர். இன்னும் சிலர், வெட்கம் இல்லாமல் இங்கேயே வசித்து வருகிறார்கள். இந்த நண்பர்களுக்குத்தான் மோடி காவலாளியாக இருந்துள்ளார். இந்த லட்சணத்தில், ஊழலற்ற அரசு என்று கூறிக்கொள்கிறார்.

பிரதமர் மோடி, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால், செலுத்தவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியதையும் செய்யவில்லை. அவரது நோக்கம், ரூபாய் நோட்டுகளை ஒழித்ததுபோல், அரசியல் சட்டத்தை ஒழிப்பதுதான்.

ஆனால் நாங்கள் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீ‌‌ஷ்கார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச வருவாய் நேரடியாக செலுத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி எளிமை ஆக்கப்படும்.”

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story