போலி பணி நியமன ஆணை தயாரித்ததாக அமைச்சரின் உதவியாளர் உள்பட 3 பேர் கைது


போலி பணி நியமன ஆணை தயாரித்ததாக அமைச்சரின் உதவியாளர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 8:09 PM GMT)

மருந்தாளுனர் பணிக்கு போலி பணி நியமன ஆணை தயாரித்ததாக அமைச்சரின் உதவியாளர் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியை சேர்ந்தவர் முத்துராசு. இவருடைய மகன் கார்த்திகேயன்(வயது 23). இவர், நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, தன்னை மருத்துவமனையில் மருந்தாளுனராக நியமனம் செய்து உள்ளதாக கூறி, தான் எடுத்து வந்த பணி நியமன ஆணை போன்ற கடிதத்தின் நகலை மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்து உள்ளார். அந்த பணி நியமன ஆணை போன்ற கடிதத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கையெழுத்திட்டதாக இருந்தது. தான் கையெழுத்திடாத நிலையில், அதுபோன்று பணி நியமன ஆணை உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனாட்சி சுந்தரம் இது குறித்து புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி விசாரணை நடத்தி னார். விசாரணையில், கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பசுபதி மகன் பிரபாகரன்(33) என்பவர் மூலம் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளருமான விக்னேஷ் என்ற விக்னேஷ்வரனிடம்(25) ரூ.2 லட்சத்தை கொடுத்து, மருத்துவ கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி பணி நியமன ஆணை தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன், பிரபாகரன், விக்னேஷ்வரன் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story