வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் முதல் நாளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை


வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் முதல் நாளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 19 March 2019 11:15 PM GMT (Updated: 19 March 2019 10:18 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. அதன்படி நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வருகிற 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ்பெற 29-ந் தேதி கடைசிநாளாகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் தொகுதிக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராமனிடம் மனுதாக்கல் செய்ய வேண்டும். அரக்கோணம் தொகுதிக்கு தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்திபனிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு நெமிலி தாலுகா அலுவலகத்திலும், குடியாத்தம் தொகுதிக்கு பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்திலும், ஆம்பூர் தொகுதிக்கு ஆம்பூர் தாலுகா அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்புமனுதாக்கல் தொடங்கியதை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யவரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும், மனுதாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 3 இடங்களில் பேரிகார்டுகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள 3 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எதற்காக செல்கிறார்கள் என்பதுகுறித்து விசாரித்து அனுப்பினர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து நேற்று கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர், மனுதாக்கல் செய்ய வருபவர்களிடம் வேட்புமனுக்களை பெறுவதற்காக காலைமுதல் மாலை வரை தங்கள் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். ஆனால் முதல்நாளான நேற்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒருசிலர் மட்டும் வந்து மனுக்களை பெற்றுசென்றனர்.

இதே போல சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வேட்பு மனுதாக்கல் செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் அறைக்கு வெளியே 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக சுவர் கெடிகாரமும் மாட்டப்பட்டுள்ளது.


Next Story