திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 20 March 2019 11:00 PM GMT (Updated: 20 March 2019 8:40 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 3 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26-ந்தேதி கடைசி நாள் ஆகும். இடையில் வருகிற 23 மற்றும் 24-ந்தேதி (சனி, ஞாயிறு) அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அந்த 2 நாட்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று முன்தினம் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான நேற்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் இரண்டாம் வீதியை சேர்ந்த வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவன தலைவர் சி.கருப்பையா(வயது 40) என்பவர் நேற்று காலை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ்.சிவராசுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஏ.சாதிக் பாட்சா(48) சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் திருச்சி தென்னூர் குத்பிஷா நகரை சேர்ந்தவர் ஆவார். திருச்சி கீழக்கல்கண்டார்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமாரும்(34) நேற்று சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். நேற்று மட்டும் 3 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

வேட்பாளர்கள், அவர் களை முன்மொழிவதற்காக வந்த அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோரை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்வதற்கு அனுமதித்தனர். மேலும் அங்கு வந்த வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

Next Story