ஹாசன் மாவட்ட காங்கிரசாருக்கு சித்தராமையா அதிரடி உத்தரவு
சித்தராமையாவை சந்தித்து பேசிய ஹாசன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக கூறினர். அவர்களிடம், மேலிட உத்தரவுப்படி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 8 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு தென்கர்நாடகத்தில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தொகுதி மட்டும் வடகர்நாடகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி தென் கர்நாடக பகுதியில் தான் அதிக செல்வாக்குடன் திகழ்கிறது.
தென்கா்நாடகத்தை பொறுத்தவரையில் தேர்தல் என்றாலே, அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே தான் நேரடி ேபாட்டி இருக்கிறது.
இங்கு பா.ஜனதாவுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பலம் இல்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மதசார்பற்ற கொள்கையை கொண்டுள்ள காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இது காங்கிரசில் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹாசன் மற்றும் மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே அரசியல் ரீதியான பகை இருக்கிறது.
அதனால், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக பணியாற்ற மாட்டோம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இது ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.
இரு கட்சிகளின் தலைவர்களும் பெங்களூருவில் நேற்று முன்தினம் கூடி ஆலோசித்து, அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சரிசெய்து, தேர்தல் பணியாற்ற வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஹாசன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது சித்தராமையா, ஹாசன் தொகுதியில் கட்சியின் நலன் கருதி கருத்து வேற்றுமைகளை மறந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி கூறினார்.
இதை ஏற்க மறுத்த ஹாசன் நிர்வாகிகள், “தயவு செய்து, ஹாசன் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றும்படி கூற வேண்டாம். சிறு பிள்ளையாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எங்களால் ஓட்டு கேட்க முடியாது. ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்தால் காங்கிரஸ் தனது பலத்தை இழந்துவிடும். அதனால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்” என்றனர்.
அதற்கு சித்தராமையா, கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி, கட்சியின் நலன் கருதி, நீங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.