தட்டாஞ்சாவடியில் ஆதரவு கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை


தட்டாஞ்சாவடியில் ஆதரவு கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 11:23 PM GMT)

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க.வினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்து இருந்து வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையொட்டி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. எனவே இந்த முறையும் தி.மு.க.வே இங்கு போட்டியிடுகிறது. வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் அசோக் ஆனந்துக்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வாக்குகள் பெற்று இருந்தார். தி.மு.க. 4–வது இடமே கிடைத்தது. எனவே இந்த முறை இங்கு இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட விரும்புகிறது. ஆனால் தற்போது காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருப்பதால் வேட்பாளரை நிறுத்துவதில் இந்திய கம்யூனிஸ்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு முடிவு செய்தது. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதையொட்டி முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது தி.மு.க. சார்பிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தி.மு.க. தேர்தல் பணிக்குழு சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்களிடம் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவதா? தி.மு.க. வுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய கட்சியின் தலைமையிடம் கருத்து கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளோம். கட்சி மேலிடம் தெரிவிக்கும் யோசனைப்படி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story