தமிழிசை என்று சொல்வதற்கு பதில் கனிமொழி பெயரை உச்சரித்த அ.தி.மு.க. வேட்பாளர் விளாத்திகுளத்தில் பரபரப்பு


தமிழிசை என்று சொல்வதற்கு பதில் கனிமொழி பெயரை உச்சரித்த அ.தி.மு.க. வேட்பாளர் விளாத்திகுளத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 8:24 PM GMT)

தமிழிசை சவுந்தரராஜன் என்று சொல்வதற்கு பதில் கனிமொழி பெயரை உச்சரித்த அ.தி.மு.க. வேட்பாளரால் விளாத்திகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. வேட்பாளராக சின்னப்பன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று முன்தினம் விளாத்திகுளத்துக்கு வந்தார்.

விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த கட்சியினரிடையே வேட்பாளர் சின்னப்பன் பேசினார். அப்போது பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் அளித்தார்.

தொடர்ந்து சின்னப்பன் பேசும் போது, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக புரட்சி தலைவி ஜெயலலிதா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆசியோடும், கூட்டணி கட்சிகள் ஆதரவோடும், இந்திய பிரதமராக நாட்டின் காவலராக இருந்து நாட்டை கட்டி காத்து வரும் நரேந்திரமோடி ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்புக்குரிய சகோதரி கனிமொழி அவர்களுக்கு... என்று கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன் என்று சொல்வதற்கு பதிலாக தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பெயரை உச்சரித்த தால் கூட்டத்தில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். தமிழிசை சவுந்தரராஜன் என்பதற்கு பதில் கனிமொழி பெயரை உச்சரித்த அ.தி.மு.க. வேட்பாளரால் விளாத்திகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story