மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய கவுன்சிலருக்கு ரூ.24 லட்சம் அபராதம் : ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத விளம்பர பதாகைகளை அகற்றியதற்காக மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய கவுன்சிலருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு மும்பையின் முக்கிய பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சியினர் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் புறநகர் பகுதியான அந்தேரியின் ‘கே’ (கிழக்கு) வார்டை சேர்ந்த கவுன்சிலர் முர்ஜித் படேல் சார்பில் சாலையோர நடைபாதையில் சட்டவிரோதமாக வைத்திருந்த விளம்பர பதாகைகளும் அகற்றப்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து பதாகைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்களை சரமாரியாக தாக்கினார்.
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓகா மற்றும் எம்.எஸ். சங்கிலேசா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவுன்சிலருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட கவுன்சிலர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேட்டிருந்தனர்.
அப்போது மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய கவுன்சிலருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த தொகையை 2 மாதங்களுக்குள் செலுத்தவேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் அபராத தொகையை காயமடைந்த ஊழியர்களின் மருத்துவ செலவுக்கும், பொது தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story