கரும்புகளுடன் டிராக்டரில் ஊர்வலமாக வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுதாக்கல்


கரும்புகளுடன் டிராக்டரில் ஊர்வலமாக வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுதாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 9:30 PM GMT)

கரும்புகளுடன் டிராக்டரில் ஊர்வலமாக வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்வதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட, கரூர் திரு.வி.க. ரோடு பகுதியை சேர்ந்த எலும்பு முறிவு டாக்டர் ஆர்.கருப்பையா (வயது 53) நேற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கரூரில் இருந்து புறப்பட்டு கரும்புகளுடன் ஊர்வலமாக டிராக்டரில் வந்தார். அப்போது நமது சின்னம் விவசாயி... என கட்சியினர் கோஷம் எழுப்பினர். மேள, தாளங்கள் முழங்க கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கருப்பையா, பின்னர் மாவட்ட செயலாளர் நன்மாறன் உள்பட 4 பேருடன் சேர்ந்து சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் முன்பு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான உறுதிமொழியினை ஏற்றார். பின்னர் சொத்து விவரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்து, வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் கருப்பையா கொடுத்து, அதற்குரிய ஒப்புகை சீட்டினை பெற்று கொண்டார். தேர்தல் செலவு கணக்கினை பராமரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரூ.81 லட்சத்து 64 ஆயிரத்து 676 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2½ கோடியில் அசையா சொத்துகளும் இருப்பதாகஅவர் வேட்பு மனு விவரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கவும் திட்டங்களை வகுப்போம். பஸ்பாடி, நெசவு தொழில் உள்ளிட்ட தொழில்கள் நலிவடைந்துள்ளது. அதனை மீட்டெடுப்போம் என்றார்.

இதே போல், திருச்சி துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவரும், அகில இந்திய மக்கள் கழகம் திருச்சி மாவட்ட செயலாளருமான பி.சுப்பிரமணியன் (53) கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நிலவி வரும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க தேர்தலில் வெற்றி பெற்று குரல் எழுப்புவேன் என்றார்.

Next Story