திருச்சி-தஞ்சை இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது


திருச்சி-தஞ்சை இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது
x
தினத்தந்தி 24 March 2019 4:15 AM IST (Updated: 24 March 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-தஞ்சை இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

திருச்சி,

திருச்சி-காரைக்கால் இடையே ரெயில் பாதைகள் தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை வரை ஒரு கட்டமாகவும், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மற்றொரு கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திருச்சி பொன்மலையில் இருந்து ஆலக்குடி வரையும், பின்னர் ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையும் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி திருச்சி- தஞ்சை இடையே ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியில் இருந்து நேற்று காலை 7.45 மணி அளவில் சிறப்பு ரெயிலில் அவர் புறப்பட்டு சென்றார். அவருடன் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார்ரெட்டி, இயக்குதல் பிரிவு முதன்மை மேலாளர் பிரசன்னா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

சோதனை ஓட்டம்

திருச்சியில் இருந்து காலை புறப்பட்ட ரெயிலில் டீசல் என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது. செல்லும் வழியில் மின்பாதைகள், ரெயில்வே பாலங்கள், சிக்னல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் தஞ்சையில் இருந்து மாலை 3.40 மணிக்கு சிறப்பு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது. திருச்சிக்கு மாலை 4.15 மணி அளவில் சிறப்பு ரெயில் வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் திருச்சி-தஞ்சை இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தி ரெயில்களை இயக்க அவர் அனுமதி கொடுத்தார். ஆய்வை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக சரக்கு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும். அதன்பின் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். 

Next Story